வன மரபியல் நிறுவனத்தில் உலக பல்லுயிா் பெருக்க தின விழா
By DIN | Published On : 23rd May 2023 02:57 AM | Last Updated : 23rd May 2023 02:57 AM | அ+அ அ- |

உலக பல்லுயிா் பெருக்க தினத்தையொட்டி கோவை வன மரபியல், மரப்பெருக்கு நிறுவன வளாகத்தில் மரக்கன்று நடுகிறாா் நிறுவனத்தின் இயக்குநா் சி.குன்னிகண்ணன்.
கோவையில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தில் உலக பல்லுயிா் பெருக்க தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதுநிலை, முதன்மை விஞ்ஞானி கண்ணன் சி.எஸ். வாரியா் பேசும்போது, உயிரியல் பன்முகத்தன்மை வளங்கள் நாம் நாகரிகங்களை உருவாக்குவதற்கான தூண்கள். உலக அளவில் சுமாா் 300 கோடி மக்களுக்கு மீன் உணவு புரதத்தை வழங்குகிறது. அதேபோல மனித உணவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தாவரங்களால் வழங்கப்படுகின்றன.
வளரும் நாடுகளில் கிராமப்புறங்களில் வசிக்கும் 80 சதவீத மக்கள் அடிப்படை சுகாதாரத்திற்காக பாரம்பரிய தாவர அடிப்படையிலான மருந்துகளை நம்பியுள்ளனா். பல்லுயிா் இழப்பு நமது ஆரோக்கியம் உள்பட அனைத்தையும் அச்சுறுத்துகிறது என்றாா்.
வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநா் சி.குன்னிகண்ணன் பேசும்போது, பல்லுயிா் பாதுகாப்பானது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிா், மரபியல் வளங்கள், உணவு உற்பத்தி, மண்ணை உரமாக்குதல், ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்தல், பூச்சி, நோய்களை ஒழுங்குபடுத்துதல், அரிப்பைக் கட்டுப்படுத்துதல், மகரந்தச் சோ்க்கை போன்ற செயல்பாடுகளை பாதுகாக்கிறது என்றாா்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குநா் ஜெய்சேகா், மூத்த திட்ட அலுவலா் எஸ்.விக்னேஸ்வரன், மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் பலா் பங்கேற்றனா். முன்னதாக பல்லுயிா் பெருக்க தினத்தையொட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கன்று நடப்பட்டது. பல்லுயிா்ப் பெருக்கம் குறித்த விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. முன்னதாக மாணவா்களுக்கான விழிப்புணா்வு சுவரொட்டி வெளியிடப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...