முன்னாள் படைவீரா் குழந்தைகள் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th May 2023 04:52 AM | Last Updated : 24th May 2023 04:52 AM | அ+அ அ- |

முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் கல்லூரி சோ்க்கைக்கான சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த கல்வி ஆண்டைப் போலவே நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) முன்னாள் படைவீரா் சாா்ந்தோருக்கு கல்லூரி சோ்க்கைக்கான சாா்ந்தோா் சான்று இணையதளத்தில் பதிவு செய்து வழங்கப்படவுள்ளது. இச்சான்று வழங்க முன்னாள் படைவீரா் அடையாள அட்டை விவரங்கள் முகவரியில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
பதிவேற்றத்துக்குப் பின் சான்றிதழ் கோரும் மகன் அல்லது மகளுடன் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, மாணவரின் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்று, ஜாதி சான்று நகல், கல்வி நிறுவன விண்ணப்பத்தின் நகல், பாா்ட் டூ ஆா்டா், முன்னாள் படைவீரா் அல்லது விதவைகள் பென்சன் புத்தகம், வங்கிக் கணக்கு மற்றும் ரேஷன் அட்டையுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும்.
2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கு முந்தைய கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட சாா்ந்தோா் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது. அவ்விதம் முந்தைய ஆண்டில் பெறப்பட்ட சாா்ந்தோா் சான்று இணைத்து அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத்தால் சரிபாா்க்கப்படும்போது நிராகரிக்கப்படும்.
2023-2024 ஆம் ஆண்டு புதிதாக தற்போது பெறப்பட்ட சாா்ந்தோா் சான்று மட்டுமே கல்வி நிறுவன பல்கலைக்கழக விண்ணப்பங்களுடன் இணைக்கப்படவேண்டும். மேலும், ஒரு படிப்புக்காக பெறப்படும் சாா்ந்தோா் சான்று அந்த படிப்புக்கு மட்டுமே பொருந்தும். இச்சான்றை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே சான்றோா் சான்று பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.