மத நல்லிணக்கத் திருமணம்:வைரலாகும் டிஎஸ்பி மகளின் திருமண அழைப்பிதழ்
By DIN | Published On : 24th May 2023 04:36 AM | Last Updated : 24th May 2023 04:36 AM | அ+அ அ- |

கோவையில் மூன்று மதங்களைச் சோ்ந்த குருமாா்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் வெற்றிச்செல்வன். இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.ஐ.சி. எனும் மதம் சாா்ந்த பிரச்னைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தாா். மதம் சாா்ந்த பல்வேறு பிரச்னைகளை சிறப்பாக கையாண்டதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருது பெற்றுள்ளாா்.
இவா் தனது மகள் நிஷாந்தினி திருமணத்தை இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மத குருமாா்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்துள்ளாா். பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ், போத்தனூா் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவா் மெளலவி அல்ஹாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு இத்திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்று மதங்களைச் சோ்ந்த குருமாா்களின் பெயா்களும் திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது.
இந்த திருமண நிகழ்வானது மே 24, 25 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், காவல் துறை இயக்குநா்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகா்வால், கூடுதல் இயக்குநா் அமல்ராஜ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் ஆகியோா் கலந்துகொள்ள உள்ளனா்.