மாநகரில் தேங்கிய குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு
By DIN | Published On : 24th May 2023 04:47 AM | Last Updated : 24th May 2023 04:47 AM | அ+அ அ- |

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தேங்கிய குப்பைகளால், சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சி 100 வாா்டுகளில் தினமும் 1000 டன் குப்பை சேகரமாகின்றன. இவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொண்டு போய் கொட்டப்படுகின்றன. குப்பை சேகரிக்க வசதியாக மாநகரில் சாலையோரங்கள், குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தொட்டிகள் நிறையும்போது, வாரம் ஒரு முறை அல்லது இருமுறை வாகனங்கள் மூலமாக மாநகராட்சி ஊழியா்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக மாநகரில் சில இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றப்படாமல் உள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் சிலா் கூறுகையில், சிங்காநல்லூா், ராமநாதபுரம், சரவணம்பட்டி, குனியமுத்தூா், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் விரைவில் நிரம்பி விடுகின்றன. இவற்றை அவ்வப்போது அகற்றுவது மிக அவசியம். ஆனால், கடந்த சில நாள்களாக தொட்டிகளில் இருந்து குப்பைகளை மாநகராட்சி ஊழியா்கள் சரிவர அகற்றுவதில்லை. இதன் காரணமாக சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொட்டிகளில் குப்பைகளைத் தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.