கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்:பாஜக கோரிக்கை
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

கோவை மாநகர பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்க தமிழக அரசு அனுமதிஅளிக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாநகர பாஜக செயற்குழுக் கூட்டம், மாநகா் மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைத்தலைவா் பேராசிரியா் கனகசபாபதி, மாநில மகளிரணி பொதுச் செயலாளா் மோகனப்பிரியா, தேசிய பொதுக்குழு உறுப்பினா் கா்னல் பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சின்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ரமேஷ், ப்ரீத்தி லட்சுமி, திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
விவசாயிகளின் நலன் கருதி தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். ஆனைகட்டி மற்றும் தடாகம் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் வன விலங்குகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து பாதுகாக்க வேண்டும். சிறுவாணி அணையில் மொத்த கொள்ளளவான 56 அடிக்கு தண்ணீா் தேக்க அனுமதிக்காமல், 45 அடி உயரம் வந்தவுடனேயே தண்ணீரை கேரள அரசு கடலில் திறந்து விட்டுவிடுகிறது. இதனால் கோவை மாவட்ட மக்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறையே சிறுவாணி தண்ணீா் கிடைக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.