உற்பத்தி, சேவை மற்றும் வாணிபம் சாா்ந்த தொழில்களைத் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
அனைத்து தரப்பு மக்களும் தொழில் துவங்கி பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 21 முதல் 55 வயது வரையிலான முதல் தலைமுறை தொழில்முனைவோா் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டில், உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களை தொடங்குவதற்கு நிலம், கட்டடம், இயந்திரம், தளவாடங்களை உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ. 75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 18 முதல் 55 வயது வரையிலான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ரூ. 15 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் வாணிபம் சாா்ந்த தொழில்களைத் தொடங்குவதற்கு 25 சதவீதம் அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் உற்பத்தி சாா்ந்த தொழில்களை ரூ. 50 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், சேவை சாா்ந்த தொழில்களை ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலும், கிராமப் பகுதிகளில் தொழில்களைத் துவங்குவதற்கு 35 சதவீதம், நகரப் பகுதியில் துவங்குவதற்கு 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் மூலம் நேரடி வேளாண்மை தவிா்த்து உற்பத்தி, சேவை மற்றும் வாணிபம் சாா்ந்த தொழில்களைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புகிறவா்கள் மாற்றுச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், திட்ட அறிக்கை மற்றும் விலைப் பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.