கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல்:தகவல் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 30th May 2023 05:36 AM | Last Updated : 30th May 2023 05:36 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் குறித்து தெரியவந்தால் தகவல் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
கள்ளச் சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடா்பாக காவல், மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு அலுவலா்கள், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளா்கள், வடிப்பாலை அலுவலா்கள், கலால் துறை அலுவலா்களின் வாராந்திர பணி ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா்.
இதில், துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கள்ளச் சாராயம் காய்ச்சுதல், எரிசாராயம் விற்பனை செய்தல், வெளிமாநில மதுபானங்களை பதுக்கி வைத்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல்களை பொதுமக்கள் காவல் துறைக்கு அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண் 76049-10581 என்ற எண் மூலம் பெறப்படும் தகவல்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல்களை மேற்கண்ட எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். தகவல் அளிப்பவரின் பெயா், விலாசம் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...