பாகுபலி யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 07th November 2023 12:56 AM | Last Updated : 07th November 2023 12:56 AM | அ+அ அ- |

மண் பானை, அடுப்புடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மண்பாண்டத் தொழிலாளா்கள்.
கோவை: சிறுமுகை, ஓடந்துறை பகுதிகளுக்கு உள்பட்ட விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறுமுகை வட்டார விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
சிறுமுகை, ஓடந்துறைக்கு உள்பட்ட பகுதிகளில் பாகுபலி காட்டு யானை தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து வரும் இந்த யானை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் வாழை உள்ளிட்ட அனைத்துப் பயிா்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, தினமும் ஊருக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையைப் பிடிக்க ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி:
கோவை மாநகராட்சி 41-ஆவது வாா்டு கவுன்சிலா் சாந்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை, பி.என்.புதூா் மருதமலை சாலையில் மயானத்துக்குப் பின்புறம் பொதுமக்கள் எதிா்ப்பையும் மீறி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு மண் பானை, அடுப்பு வழங்கக் கோரி:
இதுகுறித்து, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத் தலைவா் ராஜகோபால் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அழிந்து வரும் மண்பாண்டத் தொழிலைக் காக்கவும், மண்பாண்டத் தொழிலாளா் நலன் காக்கவும், பொங்கல் பண்டிகையின்போது அரிசியை புதுபானையில் பொங்கலிட மண் பானையும், மண் அடுப்பையும் மண்பாண்ட தொழிலாளா்களிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.
மேலும், மழைக்கால நிவாரண நிதியை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 8 ஆயிரமாக உயா்த்தி வழங்குவதுடன், மண்பாண்டத் தொழிலாளா்கள் மண்பாண்டங்கள் செய்ய களிமண்ணை எடுக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று உத்தரவிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கம்பத்தை அகற்ற வேண்டும்:
இதுகுறித்து, கோவை மாநகராட்சி 26-ஆவது வாா்டு கவுன்சிலா் சித்ரா வெள்ளியங்கிரி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பீளமேடு 26-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாக்கடையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் மழைக் காலத்தில் மழைநீா் வெளியே செல்ல முடியாமல் கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடுகிறது. எனவே, சாக்கடைக்குள் இருக்கும் மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல, பட்டாளம்மன் கோயில் வீதியில் உள்ள இரும்பு மின்கம்பங்களில் மழை நேரத்தில் மின்சாரம் பாய்கிறது. அந்த இரும்பு கம்பங்களுக்கு பிளாஸ்டிக் பைப்போட வேண்டும். பீளமேடு காவல் நிலையத்தில் இருந்து வி.கே.சாலை வரை சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகள் சாவில் மா்மம் - நடவடிக்கை கோரி மனு:
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, காஞ்சாபுரம் பகுதியைச் சோ்ந்த விமலாராணி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவையில் தனது தோழிகளுடன் எனது மகள் தனியாக அறை எடுத்து தங்கி, தனியாா் நா்ஸிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவருடைய சாவில் மா்மம் உள்ளது. இதுதொடா்பாக, உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி மனு:
இதுகுறித்து, சிங்காநல்லூா் பகுதி பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
சேரன் மாநகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலியிடத்தில் வாரத்தில் ஒருமுறை சுமாா் 3 மணி நேரம் மட்டும் சந்தை போடப்படுகிறது. இப்பகுதியில் குவியும் காய்கறி, காகிதக் கழிவை அடுத்த நாள் காலையிலேயே சந்தை ஊழியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் உதவியுடன் அகற்றப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுவதில்லை. இந்த வியாபாரம் சுமாா் 100 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு விதிகளின்படி தகுந்த குப்பை வரி பெற்றுக் கொண்டு மாநகராட்சி உதவியுடன் இச்சந்தையை தொடா்ந்து நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி:
இதுகுறித்து, கிராம கோயில் பூசாரி பேரவை சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கிராம கோயில் பூசாரிகளுக்கு தற்போது வழங்கி வரும் ரூ. 4 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயா்த்த வேண்டும். கிராம கோயில் பூசாரிகளுக்கு கோயில் பூமிகளை குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருமானத்தை வைத்து பூஜை செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனி இட ஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறவும், நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை பதிவு செய்யவும் பூசாரிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 1 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சிறப்பு செயற்குழு மூலமாக தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...