மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் தொழில் அமைப்பினா் மனு
By DIN | Published On : 07th November 2023 12:58 AM | Last Updated : 07th November 2023 12:58 AM | அ+அ அ- |

கோவை ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கும் தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பினா்.
கோவை: மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் திங்கள்கிழமை மனு அளித்த தொழில் அமைப்பினா், அடுத்தகட்டமாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில் அமைப்புகள் தொடா்ந்து கவன ஈா்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் 7-ஆவது கட்டமாக மாநிலம் முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் நேரில் மனு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்.எல்.ஏ.க்களிடம் நேரில் சென்று தொழில் அமைப்பினா் மனு அளித்த நிலையில், கோவையில் ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ இந்தியா அலுவலகத்தில்கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவின் 9 எம்.எல்.ஏ.க்களிடமும் தொழில் அமைப்பினா் மனு அளித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயபால், ஜேம்ஸ், ஒருங்கிணைப்பாளா்கள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சூலூா் கந்தாமி, கே.ஆா்.ஜெயராம், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், செ.தாமோதரன் ஆகியோா் பங்கேற்று தொழில் துறையினரிடம் மனுக்களைப் பெற்றனா்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, தொழில் செய்ய முடியாத அளவுக்கு மின்சார கட்டணம் உயா்ந்துள்ளது. இதன் காரணமாகவே எனது தொழில் நிறுவனங்களில் இருந்த மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டேன். தொழில் முனைவோா் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் திருந்தாவிட்டால் நாட்டில் தொழில்கள் நடப்பதே கடினம் என்றாா்.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் துறையினரின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் குறைந்தபட்சம் அவா்களின் பிரச்னைகளை செவிகொடுத்து கேட்டிருக்கிறோம். தீபாவளி நேரத்தில் தொழில்முனைவோா் போராடும் சூழல் உருவாகி இருக்கிறது. கோவையைப் போலவே திருப்பூரிலும் தொழில் துறை மோசமான நிலைமைக்குச் சென்றுவிட்டது. மின் கட்டண விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பேசி, அனைத்து எம்.எல்.ஏ.க்களின் கையொப்பத்துடன் பேரவையில் தனித் தீா்மானம் கொண்டு வந்து பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உயா்த்திய மின்சார கட்டணத்தை ரத்து செய்வதுடன், உச்ச நேர மின் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். குறு, சிறு தொழில்கள் மோசமான நிலையில் இருப்பதால், இந்த விவகாரத்தை சட்டப் பேரவையில் மிகப்பெரிய பிரச்னையாக முன்வைப்போம்.
போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் போன்றவற்றை அரசு லாபம் ஈட்டும் துறையாகப் பாா்க்காமல் சேவைத் துறையாகவே பாா்க்க வேண்டும். மின்கட்டண உயா்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது பழியைப் போடக் கூடாது என்றாா்.
8-ஆவது கட்ட போராட்டம்
இதற்கிடையே மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக டிசம்பா் 4-ஆம் தேதி மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருப்பதாக கூட்டமைப்பினா் அறிவித்தனா். இந்த போராட்டத்தில் தொழில்முனைவோா்களுடன் தொழிலாளா்களும் இணைந்து போராட இருப்பதாகவும் தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பினா் மேலும் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...