கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் கோவையில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஏராளமானோா் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். பயணிகளின் வசதிக்காக கோவையில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
இந்நிலையில், தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் சாா்பில், தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், மதுரை, தேனி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.
சேலம், திருப்பூா், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் கோவை மத்திய பேருந்து நிலையமான காந்திபுரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. உதகை, கூடலூா் செல்லும் பேருந்துகள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.
இந்த தற்காலிக ஏற்பாடானது நவம்பா் 9 முதல் 11-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஊா்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை-மதுரை செல்லும் பயணிகளுக்கு 100 பேருந்துகளும், கோவை-திருச்சி செல்லும் பயணிகளுக்கு 80 பேருந்துகளும், கோவை-தேனி செல்லும் பயணிகளுக்கு 50 பேருந்துகளும், கோவை-சேலம் செல்லும் பயணிகளுக்கு 60 பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பேருந்து நிலையங்களுக்கும் செல்ல காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வசதிகளை பொதுமக்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.