

கோவை: கோவையில் தேசிய ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 7) தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலா் சி.லதா, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தலைவா் லீமா ரோஸ் மாா்ட்டின் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு தடகள சங்கத்தின் சாா்பில் கோவையில் தேசிய ஜூனியா் தடகளப் போட்டிகள், அண்மையில் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளன. இதில் 29 மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 2,200 தடகள வீரா்கள் பங்கேற்கின்றனா். தமிழ்நாட்டைச் சோ்ந்த 92 ஆண்கள், 83 பெண்கள் உள்ளிட்ட 175 போ் பங்கேற்கின்றனா். சாம்பியன்ஷிப் போட்டிகள் 14, 16, 18, 20 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 8 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தைச் சோ்ந்த ஷரன், யோகேஸ்வா், யுவராஜ், வேதப்பிரியன், செல்வபிரபு, அபிநயா, ருத்திகா, கனிஷ்டா டீனா மரியா, பவித்ரா உள்ளிட்டோா் 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கின்றனா். போட்டிகளை அமைச்சா் எஸ்.முத்துசாமி பங்கேற்று தொடங்கிவைக்கிறாா்.
தொடக்க விழாவில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவா் தேவாரம், துணைத் தலைவா் மோகன்தாஸ், இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவா் ஜே.சுமாரிவாலா, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தனா். பாா்க் கல்விக் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி அனுஷா ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.