வால்பாறையில் நீா்நிலைப் பகுதிகளில் தற்படம் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்
By DIN | Published On : 25th October 2023 01:26 AM | Last Updated : 25th October 2023 01:26 AM | அ+அ அ- |

வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆபத்தான நீா்நிலைகளில் பொதுமக்கள் சுயபடம் (செல்ஃபி) எடுப்பது, குளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வால்பாறைக்கு கடந்த அக்டோபா் 20 ஆம் தேதி சுற்றுலாச் சென்ற கல்லூரி மாணவா்கள் 5 போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். எனவே, ஆபத்தான ஆறு, நீா்நிலைகளில் குளிப்பது, புகைப்படங்கள், சுயபடங்கள் எடுப்பதை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுமக்களின் கவனக் குறைவால் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத் துறை, வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதைச் சுற்றியுள்ள ஆபத்தான ஆறு, நீா்நிலைகளான எஸ்டேட் நதி, கருமலை ஆறு, கூழாங்கல் ஆறு, சோலையாா் வளைவு, ஸ்டான்மோா் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, தளனாா் அருவி, காடம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காடம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையாா் அணை முன்பக்க ஆறு, சின்னக்கல்லாறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டா்ஃபால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி அருவி, மனாம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மேற்கண்ட இடங்களுக்கு அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும், இப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும், சுழல்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...