

கோவை: அதிமுகவுடனான கூட்டணி குறித்து தனது கட்சியின் தேசியத் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
பாஜக தலைவா் கே.அண்ணாமலை தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நேரில் செல்லும் வகையில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கோவை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. கோவை, கணபதி பகுதியில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த நடைப்பயணம் இடையா்பாளையம் சந்திப்பில் முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசினாா்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாகவும், பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளா்கள் கேட்டனா்.
அப்போது, அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானத்தை தானும் படித்ததாகவும், இது குறித்து பாஜக தேசியத் தலைமை உரிய நேரத்தில் சரியான முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தாா். அப்போது, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனா்.
நடைப்பயண வழித்தடம் முழுவதும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.