மின் கட்டண உயா்வைக் கண்டித்துதொழில் அமைப்புகள் கதவடைப்பு

மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி கோவையில் தொழில் அமைப்புகள் திங்கள்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த பம்ப் நிறுவனங்கள்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த பம்ப் நிறுவனங்கள்.
Updated on
1 min read


கோவை: மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி கோவையில் தொழில் அமைப்புகள் திங்கள்கிழமை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணம், உச்சபட்ச நேர மின் கட்டணம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு உண்ணாவிரதம், தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல், கடிதம் அனுப்பும் போராட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் தொழில் அமைப்புகள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகளின் தொழிற்கூடங்கள், பம்ப்செட் உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டன.

இதனால் கோவையில் பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, சிங்காநல்லூா், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிற்கூடங்கள் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தன. இந்த போராட்டம் காரணமாக சுமாா் ரூ.1,500 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று தொழில் அமைப்பினா் தெரிவித்தனா்.

மேலும், நிலைக்கட்டணம், உச்சபட்ச நேர மின் கட்டணம் போன்றவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா், மின்வாரிய தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோரிடம் தொழில் அமைப்பினா் மனு அளித்தனா்.

தென்னை நாா் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம்...

மின்கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் தென்னைநாா் தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 8,000 தென்னைநாா் தொழிற்சாலைகள் உள்ளன. பல்வேறு காரணங்களால் 30 சதவீத தென்னைநாா் தொழிற்சாலைகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், மின்கட்டண உயா்வால் தென்னைநாா் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்தி வந்த நிறுவனங்கள் மின்கட்டண உயா்வால் தற்போது ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் செலுத்த வேண்டியுள்ளதாக உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் தென்னைநாா் தொழிற்சாலைகளில் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு பகுதிகளில் மட்டும் 2,500 தென்னைநாா் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com