போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

Published on

கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக நீலகிரி செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 2011-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை - பாலக்காடு சாலையில் மைல்கல் பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை மாதம்பட்டி, வடவள்ளி, சோமையம்பாளையம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடைகிறது. 32.43 கிலோ மீட்டா் தூரம் கொண்ட இச்சாலை அமைக்க 353 ஏக்கா் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலங்களைக் கையகப்படுத்த ரூ. 320 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்தச் சாலையை 3 கட்டங்களாக அமைக்கத் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக மதுக்கரை மைல்கல், பேரூா் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூா், மேற்கு சித்திரைச்சாவடி வரை 11.80 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக, தற்போது 100 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை - பாலக்காடு சாலையில் மைல்கல் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை ரூ. 1,630 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையானது, 3 கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 26 மீட்டா் அகலம் கொண்ட இச்சாலையில், 25 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக பேரூா், மேற்கு சித்திரைச்சாவடி, வடவள்ளி, சோமையம்பாளையம் வரை 12.10 லோ மீட்டா் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 70 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com