பிரதமா் நரேந்திர மோடி இன்று கோவை வருகை: மேட்டுப்பாளையம் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடி இன்று கோவை வருகை: மேட்டுப்பாளையம் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடி கோவைக்கு புதன்கிழமை வருகிறாா். மேட்டுப்பாளையத்தில் மதியம் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி 2 நாள் பிரசாரப் பயணமாக பிரதமா் மோடி தமிழகம் வந்துள்ளாா். சென்னை ராஜ்பவனில் செவ்வாய்க்கிழமை இரவு தங்குகிறாா். புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை ராஜ்பவனில் இருந்து காா் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் பகல் 12 மணிக்கு அரக்கோணம் ஹெலிகாப்டா் தளத்துக்கு வருகிறாா்.

அரக்கோணத்திலிருந்து விமானம் மூலம் பகல் 1.10 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வந்தடைகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பகல் 1.35 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் நான்கு சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு மதியம் 1.45 மணிக்கு வருகிறாா். அங்கு கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசுகிறாா்.

மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தை முடித்த பின்னா் மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் பிற்பகல் 3.10 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு செல்கிறாா்.

பிரதமரின் வருகையையொட்டி கோவை, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அன்னூா் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வான் வழியாக 5 கி.மீ. சுற்றளவுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் வரவழைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை முதல் மேட்டுப்பாளையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திடலை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com