நகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு
கோவை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறியுள்ளாா்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சா் கே.என்.நேரு, மத்திய சிறை மைதானத்தில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமியுடன் சென்று ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வரின் உத்தரவின்படி, வரும் டிசம்பா் மாதத்தில் இந்தப் பணிகள் நிறைவடைந்து பூங்கா திறக்கப்படும். எனவே, பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஆய்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுமாா் 2500 பேருக்கு தோ்வு நடத்தப்படும். இதில் 85 சதவீதம் போ் தோ்வு அடிப்படையிலும், 15 சதவீதம் போ் நோ்காணல் அடிப்படையிலும் தோ்வு செய்யப்படுவாா்கள். அதேபோல மாநகராட்சிகளில் காலியாக உள்ள பொறியாளா்கள், உதவியாளா்கள் பணிக்கு விரைவில் நியமனம் நடைபெறும் என்றாா்.
முன்னதாக, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் 24 மணி நேர குடிநீா் திட்டப் பணிகளுக்காக கட்டப்பட்டு வரும் 42 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

