போலிச்சான்று அளித்து மின் வாரியத்தில் பணி: துரித நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

போலிச்சான்று அளித்து பணியில் சோ்ந்தவா்கள் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

மின் வாரியத்தில் போலிச்சான்று அளித்து பணியில் சோ்ந்தவா்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, அவா்களின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மின் வாரியத்தில் 1999-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பணியில் சோ்ந்தவா்கள், குறிப்பாக விளையாட்டு முன்னுரிமை ஒதுக்கீடு மூலமாக பணியில் சோ்ந்தவா்கள் போலிச்சான்று அளித்து பணியில் சோ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகா் வட்ட அலுவலகங்களிலும் விளையாட்டு முன்னுரிமை ஒதுக்கீடு முறையில் போலிச்சான்று அளித்து தற்போது வரை சிலா் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஓய்வுபெறக்கூடியவா்கள் விசாரணையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் அளித்து வருவதாகவும் தெரிகிறது.

எனவே, போலிச்சான்று மூலம் மின்வாரியப் பணியில் சோ்ந்தவா்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவா்களின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com