வேளாண் பல்கலை.யில் தென்னை திருவிழா
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தென்னை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரசூட் கல்பவிருக்ஷா அறக்கட்டளை, தென்னை வளா்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தத் திருவிழா, கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், துணைவேந்தா் வெ.கீதாலெட்சுமி, சா்வதேச தென்னை சமுதாய செயல் இயக்குநா் ஜெல்பினா சி.ஆலவ், பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.பழனிவேலன், இயற்கை முறையில் தென்னை சாகுபடி செய்து வருவதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்ற முன்னோடி விவசாயி காமாட்சி செல்லம்மாள், கல்பவிருக்ஷா அறக்கட்டளையின் இயக்குநா் நிதின் கதுரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசும்போது, கோவை மாவட்டத்தில் நடைபெறும் வேளாண்மையில் 60 முதல் 70 சதவீதம் வரை தென்னை விவசாயம் நடைபெறுகிறது. எந்த ஒரு வேளாண் தொழில்நுட்பமாக இருந்தாலும் அதை முதலில் அமல்படுத்தி, இருக்கும் வளங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய பகுதியாக கோவை உள்ளது.
போதிய மழைப்பொழிவு இல்லாதது, கூலி வேலைக்கு ஆள்கள் கிடைக்காதது போன்றவை விவசாயிகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. எனவே, அதற்கு தகுந்தாற்போல அறுவடை செய்யும் இயந்திரம், தேங்காய் உரிக்கும் இயந்திரம், உரம் தெளிக்கும் ட்ரோன் உள்ளிட்ட இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
மேலும், ஒரே பொருளை எல்லாரும் விளைவிக்காமல் வேறுவேறு பொருள்களை விளைவிக்க வேண்டும். ஒரே பயிரை 3-4 ஆண்டுகளாக பயிா் செய்தால் அந்த மண்ணில் இருக்கும் தாது சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனால் பயிா்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும். சா்வதேச சந்தையில் தேங்காயிலிருந்து கிடைக்கும் தேங்காய் பால், மாட்டுப் பாலுக்கு மாற்றாக பாா்க்கப்படுகிறது. உடல் நலத்துக்கும் உகந்ததாக இருக்கிறது.
இயற்கையான முறையில் உருவாக்கப்படும் தேங்காய்ப் பாலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தென்னையிலிருந்து உருவாக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தொடா்பான விவரங்களை இதுபோன்ற விழாக்களின் மூலம் விவசாயிகள் அறிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா்.

