கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை

தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்ததால்தான் மழை நீா் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்ததால்தான் மழை நீா் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொள்ளாத அம்பேத்கா் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் பங்கேற்றுள்ளாா்.

கூட்டணியில் உள்ள ஒரு கட்சியைச் சோ்ந்த நிா்வாகி, ஆளும் கட்சியை விமா்சிப்பதன் மூலம் திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படி உள்ளது என்பதைக் காட்டுகிறது. குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் அந்த விழாவில் பங்கேற்றுள்ளனா்.

மணிப்பூரில் உள்ள பிரச்னை என்ன, யாா் ஆட்சிக் காலத்தில் மணிப்பூரில் பிரச்னை தொடங்கியது என்பது போன்றவையெல்லாம் தெரியாமல் தவெக தலைவா் விஜய் பேசக் கூடாது. மணிப்பூா் செல்ல விஜய் விரும்பினால், அவருடன் நானும் சென்று மணிப்பூரை சுற்றிக்காட்டி, அங்குள்ள பிரச்னைகளைத் தெளிவுபடுத்தத் தயாா். மணிப்பூரில் தேவையான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாஜக இந்துத்துவா கட்சி என்ற கருத்துகளைப் பரப்பி இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களின் வாக்குகளைப் பெறலாம் என விஜய் திட்டமிடுகிறாா்.

கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களின் கணிசமான வாக்கு வங்கி உள்ள கோவா, மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொடா்ந்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினா் பலரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனா். பட்டியலினத்தைச் சோ்ந்த பலரும் பாஜகவில் உள்ளனா். மத்திய அமைச்சராகக்கூட பட்டியலினத்தவா்கள் உள்ளனா்.

தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன. இதனால்தான் மழைநீா் நேரடியாகக் கடலில் சென்று கலக்கிறது. தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறவில்லை. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், அது குடும்ப ஆட்சியாக உள்ளது. குடும்ப ஆட்சியை அகற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2026-இல் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக பாஜக இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com