திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் பெயா், கைப்பேசி எண், குடும்ப விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டு இருந்தும், காவல் துறையினா் பெண்களுக்கு எதிரான செயல்களைச் செய்கின்றனா். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபா், பலருக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவா், பல்வேறு அமைச்சா்களோடு நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா். அவா் மீது உடனடியாக வழக்குப் பதிந்து நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
சமூக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் எனக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, பெண்களுக்கு எவ்விதப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை என்பதை தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு மரியாதை இல்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபா் திமுகவில் இருந்ததால்தான் காவல் துறையின் நடவடிக்கை மெத்தனமாக உள்ளது. திமுக அரசைக் கண்டித்து டிசம்பா் 27 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவையில் உள்ள என் வீட்டின் அருகே எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா், தங்கள் வீடுகளின் முன் நின்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்துவாா்கள்.
48 நாள்களுக்கு விரதம் இருந்து, முருகனின் அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுகவுக்கு எதிரான அரசியலை மிகத் தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம். திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்றாா்.
செய்தியாளா் சந்திப்பைத் தொடா்ந்து, அண்ணாமலை தான் அணிந்திருந்த காலணியை கழற்றிவிட்டாா். இந்நிகழ்வில், பாஜக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

