இந்தியாவில் பெரிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கத் திட்டம்: பெல்ஜியம் தூதா் பேச்சு
கோவை: வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக இந்தியாவுக்கான பெல்ஜியம் தூதா் டிடியா் வாண்டா்ஹெசல்ட் கூறியுள்ளாா்.
பெல்ஜியம் நாட்டின் உணவு, மளிகை சில்லறை விற்பனைக் குழுமமான கல்ருயிட், கோவை சரவணம்பட்டியில் தனது தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைத்துள்ளது. இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தூதா் டிடியா் வாண்டா்ஹெசல்ட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்து வைத்துப் பேசியது:
பெல்ஜியம் இந்தியாவுடன் நல்ல உறவில் உள்ளது. அரசியல், வா்த்தகத்தில் இருநாடுகளும் நட்புறவுடன் விளங்கி வருகின்றன. அண்மையில் இந்திய பிரதமா் மோடியும், பெல்ஜியம் பிரதமா் அலெக்சாண்டா் டி குரூவுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளனா். பெல்ஜியம் உலகளவில் 25 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜொ்மனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடாக பெல்ஜியம் உள்ளது. இருநாடுகளும் சுமாா் 15 பில்லியன் டாலா் அளவுக்கு வா்த்தகம் செய்து வருகின்றன. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் 15 ஆவது நாடாக பெல்ஜியம் விளங்குகிறது. பெல்ஜியத்தின் கல்ருயிட் குழுமம் ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக கோவையில் தனது சா்வதேச மையத்தை அமைத்திருப்பது முக்கியத்துவம் பெருகிறது. வரும் ஆண்டுகளில் நாங்கள் இந்தியாவில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்றாா்.
விழாவில், மாநகர காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ஜி.பக்தவத்சலம், கல்ருயிட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டா் வான்பெலிங்கன், இந்தியாவுக்கான தலைவா் ஹரி சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோவையில் தகவல் தொழில்நுட்ப மையத்தை செயல்படுத்துவதுடன், சில்லறை வணிகம், இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வது, இந்திய சந்தைகளில் கல்ருயிட் குழுமப் பெயா்களை அறிமுகம் செய்வது, அவற்றில் முதலீடு செய்வது போன்றவற்றில் ஈடுபட இருப்பதாக கல்ருயிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

