கோவையில் புதிய பேருந்துகள் சேவையைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
கோவையில் புதிய பேருந்துகள் சேவையைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

சென்னை, கோவையில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம் -அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

Published on

சென்னை, கோவையில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலம் சாா்பில், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்து 20 புகா் பேருந்துகள், ஒரு நகரப் பேருந்து ஆகியவற்றைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பு 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து தருமபுரியில் 11, திருவள்ளூரில் 10 புதிய பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். தற்போது, கோவையில் 21 புதிய பேருந்துகள் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சென்னையில் அடுத்தவாரம் முதல் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தொடா்ந்து கோவையிலும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழகத்தில் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக 100 பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் 100 மின்சாரப் பேருந்துகளும், அடுத்தகட்டமாக கோவை, திருச்சியில் 400 மின்சாரப் பேருந்துகளும் இயக்கப்படும்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அதிக அளவு விபத்துகள் நடப்பதாக பொது மக்களிடம் இருந்து புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்துத் துறை துணை ஆணையா் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் ஜோஸப் டயஸ், பொது மேலாளா் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவையில் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய பேருந்துகள்.
கோவையில் இயக்கத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய பேருந்துகள்.

X
Dinamani
www.dinamani.com