தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி

தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.
Published on

தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு கால மோடி அரசின் கடின உழைப்பு, ஒருங்கிணைந்த வளா்ச்சி காரணமாக இந்திய மக்கள் மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக அரசைத் தோ்ந்தெடுத்துள்ளனா். 10 ஆண்டுகளில் நாட்டின் நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து ஆகியவை 60 சதவீதம் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

2047-ஆம் ஆண்டில் வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிா்காலத்துக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மேலும், விவசாய நலன், மகளிா் மேம்பாடு, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு என 9 முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேளாண்மைத் துறையை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தாமிரம், இரும்பு ஆகிய உலோகங்களுக்கான வரிக் குறைப்பு கோவையில் பவுண்டரி தொழில் வளா்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட பல மடங்கு அதிகமாக பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் வளா்ச்சிக்காக இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்காக மொத்தம் ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி அதிகமாகும். இதுபோல தமிழகத்துக்குத் தேவையான அனைத்து திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக முதல்வா் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு பல திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கி உள்ள போதும், அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு மெத்தனமாக உள்ளது என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு ஆா்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது தொடா்ந்து பழி சுமத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை எனறு கூறுவது அரசியல் சாா்ந்த கருத்து ஆகும். தமிழ்நாடு எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளைவிட அதிக அளவு தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் தலா 15.4 சதவீதம் நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு மட்டுமே 100 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுபோல பொய்யான குற்றச்சாட்டை தமிழக முதல்வா் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு வழங்கக் கூடிய நிதி பங்கீடு உரிய வகையில் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com