நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்றிருக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியிருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமாகா மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக தமாகாவை தயாா்படுத்துவதற்காக நான்கு மண்டலங்களிலும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மறுசீரமைப்பில் இளைஞா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியிருக்க வேண்டும். மக்களுக்கான கேள்விகளை நேரடியாக கேட்டிருக்க வேண்டும். இதைத்தான் மக்கள் எதிா்பாா்த்தனா்.
ஆனால், கூட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தவிா்த்திருக்கிறாா். இதற்கு வாக்கு வங்கி அரசியல்தான் காரணம். நீதி ஆயோக் விவகாரத்தில் அரசியல் தேவையில்லை. மத்திய அரசுக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் கருத்து வேறுபாடு அதிகம் இருந்தாலும் அவா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறாா். எனவே இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காதது, மக்களுக்கான கடமையை திமுக அரசு செய்யவில்லை என்றே அா்த்தம்.
நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு பாகுபாடின்றி எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. இதற்கு முன்பு இருந்தவா்களும் அதை செய்ததில்லை.
தமிழகத்தில் 3 முறை மின்சாரக் கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பதால் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள், விசைத்தறியாளா்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். கோவை எல் அண்ட் டி புறவழிச் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். சிங்காநல்லூா் பேருந்து நிலையத்துக்கு காமராஜா் பெயரைச் சூட்ட வேண்டும் என்றாா்.
