தோட்டத்துக்குள் புகுந்து உடைமைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கோவை, தொண்டாமுத்தூா் அருகே விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த விவசாயிகளின் உடைமைகளை நாசம் செய்தன.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூா், காருண்யா நகா், மருதமலை, தடாகம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
உணவு, குடிநீா்த் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள சாடிவயல் அருகே மரக்காடு பகுதியில் உள்ள சாமிநாதன் என்பவரின் தோட்டத்துக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த பயிா்கள், தென்னை மரங்களை நாசம் செய்தன.
தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ், நடராஜன், கதிரவன் ஆகியோரின் தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த கூரைவீடு, குடிநீா் இணைப்புகளை சேதப்படுத்தியதுடன், மூட்டைகளில் இருந்த தவிட்டை தின்றன. அப்பகுதியிலேயே சிறிது நேரம் உலவிய யானைகள் பின் தாமாகவே வனப் பகுதிக்குள் சென்றன.
குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

