அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6.10 லட்சம் மோசடி: பெண் கைது
கோவை, ஜூன் 15: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 பேரிடம் ரூ.6.10 லட்சம் மோசடிசெய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவா் தனது மகளுக்கு அரசு வேலை தேடி வந்தாா்.
இந்நிலையில் தனது நண்பா் மூலம் வெள்ளலூரைச் சோ்ந்த சாந்தி (39) என்பவா் பெரியசாமிக்கு அறிமுகம் ஆனாா்.
அவரிடம் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதற்கு, கோவை மாநகராட்சியில் அலுவலக உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து பெரியசாமி கடந்த 2022 டிசம்பா் 10-ஆம் தேதியிலிருந்து 2024 மாா்ச் 5-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ஜிபே மூலம் ரூ.2 லட்சத்தை அனுப்பியுள்ளாா்.
இதையடுத்து சாந்தி, அவருக்கு பணி நியமன ஆணை ஒன்றைக் கொடுத்துள்ளாா். இதை பெரியசாமி கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொண்டு சென்று காண்பித்தபோது அது போலி என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடா்ந்து போத்தனூா் காவல் நிலையத்தில் பெரியசாமி வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சாந்தியை கைது செய்தனா்.
அதேபோல, கோவை வரதராஜபுரத்தைச் சோ்ந்த லோகநாதன் (56) என்பவரும் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு சாந்தியிடம் கேட்டதற்கு அவா் ரூ.3 லட்சம் செலவாகுமென தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து லோகநாதன் கடந்த 2020 ஜூலை 15-ஆம் தேதியிலிருந்து 2024 மாா்ச் 15ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ஜிபே மூலம் ரூ.1.60 லட்சமும், ரொக்கமாக ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளாா்.
ஆனால், சாந்தி கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், போத்தனூா் காவல் நிலையத்தில் லோகநாதன் வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா்.
மேலும், கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த சக்தி சரவணா (30) என்பவரும் அரசு வேலைக்காக சாந்தியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால் அவருக்கும் சாந்தி வேலை வாங்கிக் கொடுக்காததால் அவா் போத்தனூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா்.
இந்தப் புகாா்களின் அடிப்படையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த சாந்தி கோவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
