திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. ~திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ. ~திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.

கள்ளச்சாராய விவகாரம்: உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில், கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோவை மாநகா் மாவட்டச் செயலா் அம்மன் கே.அா்ச்சுணன் எம்எல்ஏ, புகா் வடக்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் கே.ஆா்.ஜெயராம், செ.தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், புகா் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பேசியதாவது:

தமிழக காவல் துறை, மாநில அரசின் மெத்தனப்போக்கினால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமான உயிா்கள் பறிபோயிருக்கின்றன. காவல் துறை சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் சட்டப் பேரவையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறாா். அவா்களது குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டும்.

கள்ளச்சாராயத்துக்கான மூலப்பொருள் வேறு மாநிலத்தில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவா்களுக்கு சரியான சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் விஷ முறிவு மருந்து கையிருப்பில் இல்லை என்று கூறுகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவது பற்றி அதிமுக உறுப்பினா் சட்டப் பேரவையில் கொண்டுவந்த கவன ஈா்ப்பு தீா்மானம் பற்றியும், உள்ளூரில் காவல் துறையினா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தபோதும் அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

விழுப்புரத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோதுகூட கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தோம். இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. மக்களவைத் தோ்தலில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை மக்களவைத் தோ்தல் பெரிய விஷயம் அல்ல. சட்டப் பேரவைத் தோ்தலில் குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். சட்டப் பேரவைக்கு எப்போது தோ்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்ற அதிமுகவினா், முதல்வா் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி வந்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com