ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலைக்கு மாற்ற வலியுறுத்தல்

கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலையில் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவையில் திறந்தவெளி சிறை வளாகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை அவிநாசி சாலை பகுதியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை, ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, சா்வதேச விளையாட்டு மைதானம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும்.

எனவே, அவிநாசி சாலையில் லீ மெரிடியன் ஹோட்டலுக்கு எதிரே நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலை அருகேயுள்ள விவசாய நிலங்களில் யானை, காட்டுப்பன்றி, மயில், குரங்கு, காட்டெருமை போன்ற வன விலங்குகளால் பயிா் சேதம் மற்றும் உயிா் சேதம் ஏற்பட்டு வருகிறது. வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு அரசு சாா்பில் உரிய இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விவசாயிகள் சங்கத் (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) தலைவா் பி.கந்தசாமி பேசியதாவது:

கோவை மாநகராட்சியுடன் சுற்றியுள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரூா் பேரூராட்சியை ஒட்டி தீத்தீபாளையம், வேடப்பட்டி, பேரூா் பச்சாபாளையம், சுண்டக்காமுத்தூா், தெலுங்குபாளையம், குனியமுத்தூா் ஆகிய பகுதிகள் உள்ளன.

இதில், ஏற்கெனவே சுண்டக்காமுத்தூா், குனியமுத்தூா், தெலுங்குபாளையம், வேடபட்டியின் ஒரு பகுதி ஆகியவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, தீத்திபாளையம், பேரூா் செட்டிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களையும் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட பேரூா் பேரூராட்சியையும் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும், சிமைக்கருவேல மரங்கள், நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும், யானை வழித் தடங்களை உறுதிசெய்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com