கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் நவ.30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

கோவை - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை - திண்டுக்கல் இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட்டது.

கோவையில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால், இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினா் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், இந்த ரயிலை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நவம்பா் 7 முதல் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06106) பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் நவம்பா் 7 முதல் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் - கோவை முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (எண்: 06107) மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com