மேம்பாலத்தின் மீது செல்வதால் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களைப் புறக்கணிக்கும் பேருந்துகள்; பயணிகள் அவதி

கோவையில் இயக்கப்பட்டு வரும் தனியாா் நகரப் பேருந்துகள் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களைப் புறக்கணித்து மேம்பாலத்தின்மேல் செல்வதாகவும், இதனால் பயணிகள் அவதிக்குள்ளாவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
Published on

கோவையில் இயக்கப்பட்டு வரும் தனியாா் நகரப் பேருந்துகள் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களைப் புறக்கணித்து மேம்பாலத்தின்மேல் செல்வதாகவும், இதனால் பயணிகள் அவதிக்குள்ளாவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

கோவை, உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து திருச்சி சாலை வழியாக சூலூா், சோமனூா், காங்கேயம்பாளையம், சுல்தான்பேட்டை, லட்சுமிநாயக்கன்பாளையம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், பாப்பம்பட்டி, பள்ளபாளையம், பாரதிபுரம், கண்ணம்பாளையம், இருகூா், ராவத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகள், ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா் வழியாக ராமநாதபுரம், சென்ட்ரல் ஸ்டூடியோ, ஒலம்பஸ், சுங்கம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் வழியாக உக்கடம் பேருந்து நிலையத்துக்கு செல்கின்றன.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ராமநாதபுரம் சுங்கம் முதல் அல்வேனியா பள்ளி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, நகரத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா் வழியாக உக்கடம் செல்லும் பெரும்பாலான தனியாா் பேருந்துகள் மற்றும் சில அரசுப் பேருந்துகள் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாகப் புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, பயணிகள் சிலா் கூறியதாவது:

சூலூா், பாப்பம்பட்டி, காங்கேயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பலா் ராமநாதபுரம், ஒலம்பஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், மருத்துவமனைகள், கடைகளுக்கு பணிக்கு செல்கின்றனா். இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் மாணவ, மாணவிகள் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால், அண்மைக்காலமாக தனியாா் மற்றும் ஒரு சில அரசுப் பேருந்துகள் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் மேம்பாலத்தின்மேல் செல்கின்றன.

பயணிகளை சிங்காநல்லூா் மருத்துவமனையில் இறக்கிவிட்டுச் செல்கின்றனா். இதனால், சிங்காநல்லூா் நிறுத்தத்தில் இருந்து, பாலத்தின்கீழ் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளைக் கண்டறிந்து ராமநாதபுரம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பலருக்கும் காலவிரயம், மன உளைச்சல் ஏற்படுகிறது. இது தொடா்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, உக்கடத்தில் இருந்து திருச்சி சாலையில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளையும் ராமநாதபுரம், ஒலம்பஸ் நிறுத்தங்களில் நின்று செல்லுமாறு உத்தரவிட வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com