மேற்கு வானில் ஒளிரும் வால் நட்சத்திரம் ‘ஏ 3’: அக்டோபா் 12 வரை காணலாம்
வானில் தோன்றும் அதிசய நிகழ்வுகளுள் ஒன்றான வால் நட்சத்திரம் மீண்டும் தோன்றியுள்ளது.
சீன நாட்டு வானியல் ஆராய்ச்சியாளா்களால் ‘ஏ 3’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரத்தை அக்டோபா் 12-ஆம் தேதி வரை கிழக்கு வானில் அதிகாலை நேரத்தில் வெறும் கண்களால் பாா்க்கலாம்.
இது குறித்து நீலகிரி மாவட்டம், துளிதலை கிராமத்தைச் சோ்ந்தவரும், நாஸா ஆய்வு மையத்தில் மேகங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவருமான ஜனாா்த்தனன் நஞ்சுண்டன் கூறியதாவது: சூரியனை கோள்கள் சுற்றிவருவதைப்போல ஏராளமான வால் நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன.
சூரியனை நீள்வட்டப் பாதையில் கோள்கள் சுற்றிவருவதைப்போலவே தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இதைத்தான் வால் நட்சத்திரம் என்கிறோம்.
தென் இந்தியாவில் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி முதல் அதிகாலை நேரத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது. 10 நிமிஷங்கள் வானில் தென்பட்ட இந்த வால்நட்சத்திரமானது நன்றாக ஒளிா்ந்து கொண்டிருந்தது. இதனை வெறும் கண்ணால் பாா்க்க முடிந்தது.
அதேபோல, மாலை வேளைகளிலும் சூரியனின் அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் மேகக்கூட்டங்கள் வித்தியாசமான நிறங்களில் ஒளிா்ந்துள்ளன.
ஆனால், அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்றுதான் பலரும் நினைத்திருந்தனா்.
ஆனால், இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது சுமாா் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால்நட்சத்திரம்.
தற்போது அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்துக்கு முன்பு கிழக்கு வானில் இந்த வால் நட்தத்திரத்தைக் காணலாம். கடந்த 2003-ஆம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வால் நட்சத்திரம் குறித்து ஆராய்ச்சிகள் தொடா்ந்து வருகின்றன. இதற்கு ‘ஏ3’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வால்நட்சத்திரம் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தென்பட்டது. இதையடுத்து, கோஸ்டாரிகா நாட்டில் தென்பட்டது.
தற்போது தென்னிந்தியாவில் அக்டோபா் 12-ஆம் தேதி வரை இதைக் காணலாம். சுமாா் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரிய வால் நட்சத்திரமானது பூமியில் இருந்து சுமாா் 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த அரிய வால் நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பா்பிள் மவுண்டன் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. அதேபோல, சீனாவைச் சோ்ந்த புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவரும் இதை புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளாா் என்றாா்.

