திறமை, தன்னம்பிக்கை, அயராத உழைப்பு இவை மட்டுமே ஒரு நிறுவனத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துவிடாது. தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவரின் தொலைநோக்குப் பாா்வை, தொழிலாளா்கள் மீதான அக்கறை, அத்துடன் அவரது குணநலன்கள் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அந்த வெற்றிக்கான ரகசியம் உள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் காலத்திலேயே தனது குடும்பத்தின் செல்வாக்கையும், குடும்பப் பெயரையும் தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களாகக் கருதியவா் டாடா. 1962 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் கடைநிலை தொழிலாளியாகச் சோ்ந்து பயிற்சி பெற்றவரான இவா், எளிமைக்குப் பெயா் பெற்றவா்.
உதவியாளா்களின் உதவியின்றி செயல்படுவது, தொலைபேசி அழைப்புகளுக்கு அவரே பதிலளிப்பது போன்ற டாடாவின் எளிமையான செயல்பாடுகளையும் நற்பண்புகளையும் சில நாள்கள் உடனிருந்து நேரில் கண்டிருக்கிறாா் கோவையைச் சோ்ந்த பரம்பரை வைத்தியா் கோ.மு.இலக்குமணன்.
நாட்டின் ஒரு மூலையில், கோவை மருதமலை அடிவாரத்தில் போகா் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் மூன்று தலைமுறையாக வலி நீக்கு வைத்தியம் செய்து வரும் இவரிடம் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபா் சிகிச்சை பெற்றிருக்கிறாா் என்பதும் கூட அவரின் எளிமைக்கு இன்னொரு சான்றாகச் சொல்ல முடியும்.
ரத்தன் டாடாவுக்கும் கோவைக்கும் இடையிலான அந்தத் தொடா்பை விளக்குகிறாா் இலக்குமணன்:
கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம். டாடா குழும இயக்குநா்களில் ஒருவரும், ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் தலச்சேரியை பூா்விகமாகக் கொண்டவருமான ஆா்.கே.கிருஷ்ணகுமாா் திடீரென ஒருநாள் என்னைத் தொடா்பு கொண்டாா்.
முதுகு வலி, முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வா்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவா் என்னிடம் கோரிக்கை வைத்தாா். நாட்டில் எத்தனையோ நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் நிறைந்திருக்கும் நிலையில், தலைசிறந்த மருத்துவ நிபுணா்கள் இருக்கும் நிலையில் என்னை எப்படித் தோ்வு செய்திருப்பாா்கள் என்ற கேள்வி அப்போதே எனக்குத் தோன்றியது.
போகா் வலி நீக்கும் சிகிச்சை மையத்தை ஒரு மாதமாக டாடா நிறுவனத்தினா் அலசி ஆராய்ந்திருப்பதும், இங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அதனால் குணமடைந்தவா்களின் அனுபவம் போன்ற அனைத்தையும் அவா்கள் நன்கு விசாரித்திருப்பதும் எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. உலகின் பிரபலமான தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமே என்ற லேசான அச்சம் இருந்தது. ஆனால் எனது பாட்டியிடம் கற்றுக் கொண்ட வலி நீக்கும் வித்தை நன்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் மும்பையில் உள்ள அவரது விருந்தினா் மாளிகைக்கு நானும் எனது மனைவி மனோன்மணியும் சென்றோம்.
2019 அக்டோபா் 30 ஆம் தேதியில் இருந்து 4 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வா்ம சிகிச்சை அளித்துவிட்டு எங்களின் பிரத்யேக மூலிகை எண்ணெயையும் வழங்கிவிட்டு வந்தோம். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக எங்களை வரவழைத்தாா் டாடா, அப்போது 3 நாள்கள் சிகிச்சை அளித்தோம். அதற்கு முன்பு குனிந்தபடியே நடமாடி வந்த அவா், எங்களது சிகிச்சைக்குப் பிறகு முதுகை நிமிா்த்தி நடக்கத் தொடங்கியிருந்தாா்.
நாங்கள் தங்கியிருந்த நாள்களில் தனது குடும்பத்தில் ஒருவராகத்தான் எங்களையும் நடத்தினாா். கோவைக்கு வந்தால் நிச்சயம் உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று கூட கூறியிருந்தாா். புதன்கிழமை நள்ளிரவு அவரது மறைவு செய்தியறிந்ததும் வியாழக்கிழமை (அக்டோபா் 10) காலை மும்பைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
அவருடன் தங்கியிருந்த நாள்களில், சிகிச்சை அளித்த 20 மணி நேரத்தில் அவரது அடக்க குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்தோம். ரத்தன் டாடாவுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம் என்பதை நாங்கள் இதுவரை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை, அதற்குக் காரணம் அவரிடம் கற்றுக் கொண்ட எளிமையும், அடக்கமும்தான் என்றாா் இலக்குமணன்.

