மாவட்டத்தில் புதிதாக 44 வாக்குச் சாவடிகள்: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் புதிதாக 44 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
Published on

கோவை மாவட்டத்தில் புதிதாக 44 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்வதன் தொடா் நடவடிக்கையாக, வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலை இறுதி செய்யும் பொருட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைந்த வாக்குச் சாவடிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் உள்ள மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 3,077. மொத்த வாக்குச் சாவடி மையங்களின் எண்ணிக்கை 1,015. வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவதில், கோவை மாவட்டத்தில் புதிதாக 44 வாக்குச் சாவடிகளை உருவாக்கம் செய்யவும், 64 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றுள்ள பகுதிகளை மாற்றி அமைக்கவும், 7 வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலா் மூலமாக இந்தியத் தோ்தல் ஆணயத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த இறுதி செய்யப்பட்ட வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் மீது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் எழுத்து வடிவில் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், அலுவலா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com