

கோவையில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக பாரம் தாங்காமல் லாரி பாதாள சாக்கடையில் சிக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவையில் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும்போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கிக் கொண்டு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அரிசி மூடைகளை ஏற்றி வந்த லாரி ப்ரூக்ஃபீல்டுஸ் வணிக வளாகம் அருகே உள்ள சாலையில் சிக்கிக் கொண்டது. அதேபோன்று உடையாம்பாளையம் பகுதிகளும் பாரம் தாங்காமல் சாலை உள்வாங்கியது அதில் ஒரு லாரி சிக்கிக் கொண்டது.
இதேபோன்று பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகள் மூடப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் செல்லும்பொழுது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணியக்காரன் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலையில் சென்ற லாரி அங்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அப்பொழுது அப்பகுதியில் எந்த வாகனமும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், அந்த சாலை நீண்ட தூரம் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது போடப்பட்ட புதிய சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: திருச்சியில் மோகன் பாகவத் பங்கேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.