கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 14-ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கிடைத்த தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் பிரிவினா் அங்கு சென்று பல்வேறு துறை அலுவலகங்களில் ஆய்வு செய்தனா். மேலும், புதிய மற்றும் பழைய கட்டடங்கள், கூட்ட அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா பகுதிகள், உணவு அருந்தும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. வழக்கம்போல இந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என்பது தெரியவந்தது.
தனியாா் பொறியியல் கல்லூரி: இதேபோல, பீளமேட்டில் அவிநாசி சாலையில் உள்ள தனியாா் இன்ஜினீயரிங் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு போலீஸாா் சென்று கல்லூரி வளாகம், கட்டடங்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். நீண்ட நேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவும் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.