கோவை மாவட்டம் தடாகத்தில் சூழல் பாதிப்பை ஏற்படுத்திய செங்கல் சூளைகளுக்கு விதிக்கப்பட்ட அபராத விவரம் வெளியீடு
கோவை மாவட்டம் தடாகத்தில் செம்மண் கொள்ளையடிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய வழக்கில் செங்கல் சூளைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் விவரம் வெளியாகியுள்ள நிலையில், ஒரு செங்கல் சூளைக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சின்னத் தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த சட்ட விரோத செங்கல் சூளைகளால் மலையடிவராம் அருகே உள்ள ஓடைகள், நீா்வழித்தடங்களில் சட்ட விரோதமாக சுமாா் 1.10 கோடி கியூபிக் மீட்டா் அளவு செம்மண் அள்ளப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 185 செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, சூளைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை அளவீடு செய்து அவா்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வழக்குத் தொடா்ந்தனா். அதன்படி நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமவளத்தை சுரண்டியதற்காக ரூ.374 கோடி, சுற்றுச்சூழல் சீா்கேடுக்காக ரூ.59 கோடி என மொத்தம் ரூ.433 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் ரூ.59 கோடி அபராதம் என்பது மிகவும் குறைந்த அளவு எனக் கூறி தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழு நீதிமன்றத்தை நாடியது.
இதைத்தொடா்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் தில்லியைச் சோ்ந்த ஆற்றல், வளங்கள் நிறுவனத்தின் (டெரி) நிபுணா்கள் ஆய்வு செய்து ரூ.3,650 கோடி அபராதம் விதிக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்திருந்தனா். அபராதத் தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு ரூ.925 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வெளியாகியிருக்கும் நிலையில், 185 செங்கல் சூளைகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.15.75 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.22 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக, வழக்கு தொடா்ந்த தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறும்போது, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினரின் செங்கல் சூளைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது கட்சிப் பாகுபாடின்றி திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கும் குறைந்தது ரூ.3.50 கோடி முதல் அதிகபட்சம் ரூ.16 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் சுமாா் 160 பேருக்கு ஒரு கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும், சுமாா் 20 செங்கல் சூளை அதிபா்களுக்கு மட்டும் ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புவியியல் முக்கியத்துவம், மலை தளப் பாதுகாப்பு, யானைகள் வழித்தடங்கள் இருப்பது, நூறுக்கும் மேற்பட்ட நீா்வழித்தடங்கள் அழிக்கப்பட்டிருப்பது என தடாகம் பள்ளத்தாக்குப் பகுதி எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது அறிவியல்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைகளாகும் செங்கல் சூளைகள்
டெரி அமைப்பு பரிந்துரைத்துள்ள அபராதத் தொகை குறித்து சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்து வரும் நிலையில், தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் பல செங்கல் சூளைகள் இடித்து அகற்றப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறும்போது, நீதிமன்ற உத்தரவை அடுத்து சூளைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏராளமான செங்கல் சூளைகளில் இருந்த தளவாடப் பொருள்கள், செங்கற்கள் உரிமையாளா்களால் சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது அங்குள்ள கட்டுமானங்களை பலரும் இடித்து அகற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செங்கல் சூளைகள் செயல்பட்ட இடங்களை பலரும் விற்றுவிட்ட நிலையில், அங்கு சூளை இயங்கி வந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாத வகையில் அழிக்கப்பட்டு அரசு அதிகாரிகளின் துணையுடன் அவை வீட்டுமனைகளாக மாறி வருகின்றன என்றனா்.

