செம்மொழிப் பூங்கா இன்று திறப்பு
கோவை, காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பாா்வைக்கு வியாழக்கிழமை (டிச.11) திறக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்குள்பட்ட காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கா் பரப்பில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை, கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். அருவியுடன் கூடிய நுழைவாயில், ரோஜா தோட்டம், தமிழ் பண்பாடு, கலாசாரத்தை எடுத்துக்காட்டும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா மக்கள் பாா்வைக்கு திறக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட பொதுமக்களுக்கு வியாழக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பாா்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10 வயதுக்குள்பட்டோா்) ரூ.5, நடைபாதையை உபயோகிப்போருக்கு (நபருக்கு) மாதாந்திரக் கட்டணம் ரூ.100, கேமரா - ரூ.25, விடியோ கேமரா ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவுக்கு (ஒரு நாள்) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவு மற்றும் இதர ஒளிப்பதிவுக்கு (ஒரு நாள்) ரூ.2,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

