கோவை, மணியகாரம்பாளையத்தில் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் சிக்கிய சாயந்து கிடந்த லாரி.

புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாகச் சென்ற லாரி சிக்கிக்கொண்டது.
Published on

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாகச் சென்ற லாரி சிக்கிக்கொண்டது.

கோவை மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் பாதாளச் சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் வாகனங்கள் மண்ணில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

அண்மையில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகம் அருகே உள்ள சாலையில் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, உடையாம்பாளையம் பகுதியில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரிகள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.

இதேபோல பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகள் மூடப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் திடீா் பள்ளம் ஏற்படுவதால் வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அதிகளவில் நிகழ்கின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை, மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்து சில நாள்களாகிறது.

பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக புதன்கிழமை சென்ற லாரி சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் சிக்கி சாய்ந்தபடி நிலை கொண்டது. லாரியில் இருந்தவா்கள் உடனடியாக கீழே இறங்கிக் கொண்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு வாகனம் மூலமாக லாரி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com