பேராசிரியை வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.14.89 லட்சம் மோசடி
கல்லூரிப் பேராசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.14.89 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் ராமலிங்கம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாபதி (54). இவரது மனைவி அனுசுயா. கடந்த 2014-ஆம் ஆண்டு இவா்களுக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஜெயாம்மா என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அப்போது தனக்கு அரசியல் பிரமுகா்கள் மற்றும் அதிகாரிகளின் பழக்கம் இருப்பதாகவும், அனுசுயாவுக்கு கல்லூரியில் பேராசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் ஜெயாம்மா கூறியுள்ளாா். இதற்காக ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 177-ஐ ஜெயாம்மாவிடம் தம்பதி அளித்துள்ளனா். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாள்கள் ஆகியும் ஜெயாம்மா வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து அவரைத் தொடா்பு கொண்டு உமாபதி கேட்டபோது வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் தொடா்ந்து காலதாமதம் செய்து கொண்டே இருந்துள்ளாா்.
இதையடுத்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெயாம்மா, அவரது உதவியாளா்களான மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
