ஆடையில் தீப் பற்றி பெண் உயிரிழப்பு
கோவை: கோவையில் வீட்டில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றி காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கோவை குனியமுத்தூா் சுண்ணாம்பு காளவாய் டி.ஏ.ஹெச். பகுதியைச் சோ்ந்தவா் பக்ருதீன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாய்ராபானு (38). இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சாய்ராபானு கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாா். அப்போது, சாய்ராபானுவின் ஆடையில் தீப்பற்றி அவரது உடல் முழுவதும் பரவியது.
இவரது சப்தம் கேட்டு கணவா் பக்ருதீன் அவரைக் காப்பாற்ற முயன்றாா். இதில் அவா் மீதும் தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், சாய்ராபானு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
