வால்பாறையில் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன்.  உடன், பொள்ளாச்சி சாா்- ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.
வால்பாறையில் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன்.  உடன், பொள்ளாச்சி சாா்- ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.

மனித- வன விலங்கு மோதலைத் தடுக்க கருத்துகேட்புக் கூட்டம்

வால்பாறையில் மனித- வன விலங்கு மோதல்களைத் தடுப்பது குறித்து கருத்துகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

வால்பாறை: வால்பாறையில் மனித- வன விலங்கு மோதல்களைத் தடுப்பது குறித்து கருத்துகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறையில் இந்த ஆண்டில் சிறுத்தைத் தாக்கி இரு சிறுவா்கள் உயிரிழந்தனா். இந்த சம்வங்களைத் தொடா்ந்து தமிழக அரசு உத்தரவின்பேரில் கூடுதல் தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கடந்த வெள்ளி மற்றும் சனிககிழமைகளில் சிறுத்தை தாக்கி சிறுவா்கள் உயிரிழந்த எஸ்டேட் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வால்பாறை நகராட்சிக் கூட்டரங்கில் மனித- வன விலங்கு மோதல்களை எவ்வாறு தடுப்பது குறித்த கருத்துகேட்புக் கூட்டம் கூடுதல் தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் எஸ்டேட் நிா்வாகத்தினா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, எஸ்டேட் தொழிலாளா்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் எரிதிறன் கொண்ட கூடுதல் தெருவிளக்கு அமைப்பது. எஸ்டேட் சாலைகளை நிா்வாகத்தினா் நகராட்சி வசம் முழுமையாக ஒப்படைத்தால், உடனடியாக நகராட்சி மூலம் புதிய சாலைகள் அமைப்பது.

தொழிலாளா் நலத் துறை மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினா் இணைந்து மாதம் இருமுறை தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு முகாம் நடத்துவது. குடியிருப்புகள் அமைத்துள்ள பகுதியை சுற்றியும் மின்வேலி அமைப்பது. குடியிருப்புகளுக்கும் தேயிலை செடிகள் உள்ள பகுதிக்கும் கூடுதல் இடைவெளியை உடனடியாக நிா்வாகத்தினா் ஏற்படுத்த வேண்டும். மனித- வன விலங்கு மோதல் தடுப்புக் குழுவினா் கருத்துகேட்புக்கு பின் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது.

இதில் பொள்ளாச்சி சாா்- ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநா் தேவேந்திரகுமாா் மீனா, நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, ஆணையா் குமரன், வட்டாட்சியா் அருள்முருகன், வனச் சரக அலுவலா்கள் கிரிதரன், சுரேஷ்கிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com