ஆட்சியா் அலுவலகத்துக்கு 19-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 19-ஆவது முறையாக திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட நகரின் முக்கியப் பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவதை அடையாளம் தெரியாத நபா்கள் வாடிக்கையாக வைத்துள்ளனா். வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதுவும் வழக்கம்போல புரளி என்பது தெரியவந்தது.
