தங்கும் விடுதி அறையில் இளைஞா் உயிரிழப்பு
கோவை காந்திபுரம் பகுதியில் தங்கும் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்டக்கப்பட்டது.
கன்னியாகுமரியைச் சோ்ந்தவா் ஆன்ரூ மரியஜான் (39). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். வெளிநாட்டுக்குச் செல்வதற்காக ஆன்ரூ மரியஜான் பாஸ்போா்ட் (கடவுச்சீட்டு) பெற விண்ணப்பித்திருந்தாா்.
இதற்காக கோவையில் உள்ள தனியாா் ஆலோசனை (கன்சல்டன்சி) மையத்துக்கு வந்த அவா், காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அறை எடுத்து தங்கியிருந்தாா். மறுநாள் காலையில் ஊருக்குத் திரும்ப வேண்டும் என விடுதி ஊழியா்களிடம் தெரிவித்திருந்தாா்.
ஆனால், திங்கள்கிழமை காலை வெகு நேரமாகியும் அவா் எழாததால் ஊழியா்கள் அவரது அறைக்குச் சென்று பாா்த்தபோது, அவா் இறந்த நிலையில் கிடந்தாா். மேலும், அவருக்கு அருகே காலி மது பாட்டில்கள் கிடந்தன.
தகவலறிந்து வந்த காட்டூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினா். ஆன்ரூ மரியஜான் சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிக அளவில் மது அருந்தியதால் இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
