ரூ.3.50 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கக் கோரி மேயரிடம் மனு
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் ரூ.3.50 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் காளப்பட்டி பெரியாா் நகா் குடியிருப்போா் நல அமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: எங்கள் பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், நூற்றுக்கணக்கான 4 சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தும், இப்பகுதியில் சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இங்குள்ள 3 முக்கியச் சாலைகளும் 22 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை.
தற்போது, சாலைகள் முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு, மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரிசா்வ் சைட் பாதுகாப்பு சங்கம் சாா்பில் மேயரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மீனாட்சி நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.3.50 கோடி மதிப்புள்ள 13 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு வாா்டுகளை சோ்ந்த மக்கள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாளச் சாக்கடை இணைப்பு, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 56 மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன், மாநகரக் கல்வி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
