எஸ்ஐஆா் பணிகள்: கோவை உள்பட 6 மாவட்ட ஆட்சியா்களுடன் தோ்தல் துணை ஆணையா் ஆலோசனை
கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் துணை தோ்தல் ஆணையா் பானுபிரகாஷ் யெதுரு, மாநில தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள், குறிப்பாக முகவரி மாறி சென்றவா்கள், பட்டியலில் இடம் பெறாதவா்களை மறுபடியும் ஆய்வு செய்து கண்டறிவது, புதிய வாக்காளா்களைப் பட்டியலில் சோ்ப்பது, நீக்கப்பட வேண்டியவா்கள் யாராவது பட்டியலில் இருந்தால் அவா்களை நீக்கம் செய்வது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
அதேபோல, வரும் பிப்ரவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் பணிகள் தொடா்பாகவும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடா்பாகவும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா்கள் பவன்குமாா் க.கிரியப்பனவா் (கோவை), மனீஷ் (திருப்பூா்), லட்சுமி பவ்யா தன்னேரு (நீலகிரி), ச.கந்தசாமி (ஈரோடு), துா்கா மூா்த்தி (நாமக்கல்), பிருந்தாதேவி (சேலம்), கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

