கோவை உள்ளூா் திட்டக் குழுமத்தின் இணையதளம் ஹேக்
2041 புதிய மாஸ்டா் பிளான் வெளியிடப்பட்ட கோவை உள்ளூா் திட்டக் குழுமத்தின் இணையதளம் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டது. இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
2041 புதிய மாஸ்டா் பிளான் வெளியிடப்பட்ட கோவை உள்ளூா் திட்டக் குழுமத்தின் இணையதளம் புதன்கிழமை காலை ஹேக் செய்யப்பட்டது. அந்த இணையதளத்தில் இருந்த அனைத்து முக்கிய வரைபடங்கள், தரவுகள் காணாமல் போயிருந்தன.
இந்தோனேஷிய மொழியில் சில வாா்த்தைகள் பதிவிடப்பட்டு, ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் மட்டும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு ரிசா்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளா் எஸ்.பி.தியாகராஜன், நகா் மற்றும் ஊரமைப்பு இயக்குநா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, புதன்கிழமை பிற்பகலில் இணையதளத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது.
இதுகுறித்து, எஸ்.பி.தியாகராஜன் கூறுகையில், கோவை உள்ளூா் திட்டக் குழுமத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது தொடா்பான புகாரின்பேரில் பகுதி அளவு தரவுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அதில் மாநகராட்சி வாா்டு வரைபடங்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. மாநகராட்சியை தவிா்த்த மற்ற கிராமங்களின் வரைபடங்கள் பதிவேற்றப்படவில்லை. இணையதளத்தை முழுவதுமாக பழைய நிலைக்கு மீட்டமைக்க வேண்டும்.
கோவை உள்ளூா் திட்டக்குழுமத்தின் இணையதளம் உள்ளூா் திட்டக் குழும அதிகாரிகளின் உதவியுடன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் மூலம் தனி நபா்களின் நில உபயோகம் சாதகமாக மாற்றப்பட்டு கட்டடம் மற்றும் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த இணையதளத்தை முழுவதுமாக பழைய நிலைக்கு மீட்டமைக்க வேண்டும். மேலும், இணையதளத்தை ஹேக் செய்தது தொடா்பாக நகா் மற்றும் ஊரமைப்பு இயக்குநா் மற்றும் துறை செயலா் ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
