பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதிமுகவிலிருந்து மேலும் சிலா் விலகி தவெக-வில் இணைவாா்கள் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நடத்திய அனைத்து மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பெரும்பாலானோா் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்து துரோகத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என ஓ.பன்னீா்செல்வம் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். இவற்றின் அடிப்படையில் அவா் விரைவில் நல்ல முடிவை எடுப்பாா்.
காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. இணைய வேண்டிய இடத்தில் இணைவோம். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து மேலும் சிலா் விலகி தவெக-வில் இணைவாா்கள். டிடிவி தினகரனும், ஓ.பன்னீா் செல்வமும் எங்களுடன் பேசிக் கொண்டு இருப்பது உண்மைதான். அவா்கள் எப்போது முடிவை எடுப்பாா்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.
எனது அரசியல் பயணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மலேசியாவில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வாா் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவா் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். தவெக கொங்கு மண்டலத்திலும் வெற்றி வாகை சூடும் என்றாா்.
