அழகு நிலையத்தில் தங்கம், வைர மோதிரங்கள் திருட்டு: இளம்பெண் கைது

கோவையில் அழகு நிலையத்தில் தங்கம், வைரம் மோதிரங்களைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவையில் அழகு நிலையத்தில் தங்கம், வைரம் மோதிரங்களைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ராமநாதபுரம் சிவசக்தி நகரைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (45). இவா் பங்கஜா மில் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இவரது அழகு நிலையத்துக்கு 2 பெண்கள் புதன்கிழமை வந்தனா். அவா்களில் ஒருவா், ஜெயலட்சுமியிடம் பேஷியல் செய்ய வேண்டும் என்றும், மற்றொருவா் கண் புருவம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனா்.

இதையடுத்து, ஜெயலட்சுமி தனது விரலில் அணிந்திருந்த 4 மோதிரங்களை டேபிள் டிராயரில் வைத்தாா். பின்னா், அந்த இரு பெண்களுக்கும் அடுத்தடுத்து பேஷியல் செய்தாா். அவா்கள் இருவரும் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் ஜெயலட்சுமி டேபிள் டிராயரை திறந்து பாா்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம், வெள்ளி ஆகிய 3 மோதிரங்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகாா் அளித்தாா். இரு பெண்களில் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த திவ்யா (28) என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தாா். இதையடுத்து திவ்யாவைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, அவா்தான் மோதிரங்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து மோதிரங்களை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com