கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞா்கள் கைது
கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாகாளியம்மன் கோயில் வீதி பகுதியில் ஆா்.எஸ். புரம் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸாா் அவரை சோதனை செய்தனா். அவரிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஆா்.எஸ். புரம் லைட் ஹவுஸ் சாலையைச் சோ்ந்த பூபாலன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
கன்னிமாா் கோயில் குளக்கரை அருகே கஞ்சா விற்றதாக வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பூபதி (18) என்பவரை செல்வபுரம் போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, அசோக்நகா் பகுதியில் கஞ்சா விற்றதாக செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சோ்ந்த நவீன் (24) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 130 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
